Friday, January 16, 2009

எனக்குப் பிடித்த பாடல்கள்(2008)

5. பாடல் சிவகாசி ரதியே
   பாடியவர் பெரிய கறுப்புத் தேவர்
   இசை S.S. குமரன்
   எழுதியவர் ஞானக் கரவேல்
   படம்  பூ

      இந்தப் பாடல் அருமையான பாடல் என்று வாதாடக் கூட அவ்வளவு விஷயங்கள் இல்லை. ஆனால் நிச்சயமாக நல்ல பாடல். கேட்டதும் முணுமுணுக்க வைத்து, புரிந்ததும் மெல்லிய புன்னகையை இதழில் விட்டுச் சென்ற வரிகள். "உன்ன எந்த காலம் பார்த்தது தாயி; இவ அந்த கால ஐஸ்வர்யா ராய்".இது தான் நான் கவனித்த முதல் வரி. சிணுங்கலும்,சேட்டையும் நிறைந்த பாடல். 

(bear with the ad.)



4.   பாடல் யாரோ மனதிலே
   பாடியவர்கள் பாம்பே ஜெயஸ்ரீ, கிரிஷ்
   இசை ஹாரிஸ் ஜெயராஜ்
   எழுதியவர் பா.விஜய்
   படம் தாம் தூம்
   
     இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க பெரிய காரணம் எதுவும் இல்லை. கேட்க இனிமையான பாடல். பாம்பே ஜெயஸ்ரீ அவர்களை ஏன் இப்படி எல்லப் பாடல்களையும் ஒரு மாதிரி Husky Voiceல் பாட வைக்கிறார்கள் என்று இந்த பாடலைக் கேட்ட பிறகும் தோன்றியது. ஆனாலும் மென்மையான பாடல்.



3.   பாடல் ஆவாரம் பூ
     பாடியவர் சின்மயி
     இசை S.S.குமரன்
   எழுதியவர் நா.முத்துகுமார் 
     படம் பூ

       முதல் முறைக் கேட்டதும் இந்தப் பாடலைப் பாடிய குரல் என்னை ஈர்த்தது. கொஞ்ச நாளைக்குப் பிறகு இதன் வரிகள் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏன் திரை இசைப் பாடலில் "ஆவாரம் பூ" காத்திருக்கும் ஒரு மலராகவே இருந்து வருகிறது என்று இன்று வரை புரியவில்லை.(உ.ம்) ஆவாரம் பூவு ஆரேழு நாளா, ராசாவே உன்ன நா எண்ணித்தான் பாடலில் வரும் 'ஆவாரம் பூவு அதுக்கொரு நோவு:உன்ன நெனச்சு காத்துக் கெடக்கு'என்ற வரி. ஆவாரம் பூ வரும் பாடல்கள் எல்லாமே நன்றாகத் தான் இருக்கிறது. இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த வரி 'சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா?'  மனம் கணக்கும் வரிகள்.

(bear with the ad)


 இரண்டு பாடல்கள் 2ம் இடத்தில். 

a) பாடல் மருதாணி
   பாடியவர்கள் மதுஸ்ரீ,A.R.ரகுமான்,ஹென்ரி
   இசை A.R.ரகுமான்
   எழுதியவர் வாலி
   படம் சக்கரக்கட்டி

     மறுபடியும் ஒரு காதல் பாடல். அசத்தும் இசை,அழகான குரல்,இசையுடனே பயணம் செய்யும் chorus என்று காதில் ரம்மியமாக ஒலிக்கும் இந்தப் பாடல். மயிலிறகால் மனதை வருடும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் இதன் இசையும், குரலும். மதுஸ்ரீயின் தமிழ் உச்சரிப்பு மட்டும் கொஞ்சம் கஷ்டப்படுத்தும்.ஆனாலும் அவர் குரல் அதை மறைத்து விடுகிறது. A.R.ரகுமானை நினைத்து நினைத்து ஆச்சர்யப் பட வைக்கிறது இந்தப் பாடல்(லும்).


b)   பாடல் ஆழியிலே முக்குளிக்கும் அழகே
     பாடியவர் ஹரிசரண்
     இசை ஹாரிஸ் ஜெயராஜ்
     எழுதியவர் நா.முத்துகுமார்
     படம் தாம் தூம்
 
   குரல்,வரி,லேசான இசை இந்த மூன்றும் இந்தப் பாடலின் அழகு. காதலி மீது காற்றாகவும்,இச்சென்று இதழ் வைக்கவும் ஆசைப்படும் காதலன் பாடும் பாடல். பாடல் முடிந்த பிறகும் காதில் ரீங்கரிக்கும் பாடல்.


1.   பாடல் கண்டும் காணாமல்
     பாடியவர் சாதனா சர்கம்
     இசை வித்யாசாகர்
     எழுதியவர் யுகபாரதி
     படம் பிரிவோம் சந்திப்போம்
 
   மென்மையான இசை, இழையோடும் சிறு சோகம், இனிய குரல். அழகிய வரிகள் என்று எல்லாமே சேர்ந்து இந்த பாடலை என் மனதில் ஆழப் பதிய வைத்து விட்டன.
     "விடைகளைத் தேடும் ஆவலில் கேள்வி போல் நாளும் தேங்கினோம்"
     "மாறுதல் ஆறுதல் ஆகுமே!"
     தனிமையின் வாட்டம் காதலர்களை எப்படித் தாக்கும் என்று சொல்லும் பாடல்களைத் தான் நாம் அதிகம் கேட்டுள்ளோம்.ஆனால் இந்தப் பாடலில் சொல்லி இருக்கும் பிரிவின் வேதனை காதல், காமம் அல்லாத பாசம் மட்டுமே நிறைந்த மற்ற உறவுகளைப் பிரிந்ததால் தோன்றியது. அதை இவ்வளவு மென்மையான குரலில் ஆழமான வார்த்தைகளில் தந்திருப்பதால் என் listல் சென்ற ஆண்டின் முதல் இடம் இந்தப் பாடலுக்குத் தான். 



இவை எல்லாம் தனித் தனியாக எனக்குப் பிடித்த பாடல்கள்.

எல்லாப் பாடல்களும் அழகாக அமைந்து ஒட்டு மொத்தமாக என் மனதை அள்ளிக் கொண்ட Album "சக்கரக்கட்டி". ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். A.R.ரகுமான் எவ்வளவு நல்ல பாடல்கள் தந்தாலும் அதைக் கெடுக்கும் இயக்குனர்களை என்னவென்று சொல்வது? 

Just miss பாடல்கள்:

    இந்தப் பாடல்களைத் தவிர வேறு சில பாடல்களும் எனக்குப் பிடித்திருந்தது.

   கண்டேன் கண்டேன் -- பிரிவோம் சந்திப்போம் படத்தில் வரும் அருமையான பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நின்று முழுப் பாடலும்  முடிந்த பிறகு தான் நகரத் தோன்றும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திய பாடல். ஆனால் கேட்ட மாதிரியே இருந்த இசை தான் இது என் listல் முதல் 5 இடங்களில் வரத்தவரக் காரணம்.அதுவே இந்தப் பாடல் பிடிக்கவும் காரணமாக இருக்கலாம்.

   கல்லை மட்டும் -- இந்தப் பாடல் மட்டும் மலையாளப் பாடலைத் தழுவியது என்று தெரியாமல் இருந்திருந்தால் முதலிடம் இந்தப் பாடலுக்குத் தான் தந்திருப்பேன். வாலியின் தீவிர ரசிகை நான். அது ஒன்றே போதுமாக இருந்தது எனக்கு இந்தப் பாடல் பிடிக்க. ஆத்திகத்தை ஆதிக்கக் குரலில் தந்து ஆழமாக மனதில் நிற்க வைத்ததோடு மட்டும் நிற்காமல் ஒவ்வொரு வரியின் அர்த்தத்தையும் தேட வைத்த இந்தப் பாடல் நிஜமாகவே அருமையான பாடல் தான். ஆனால் இசை அவ்வளவு பிரமாதமாக இல்லை என்பது ஒரு குறை தான். ஹரிஹரன் அவர்களின் குரலில் இருந்த கம்பீரம் பெரிய பலம்.

   அஞ்சல -- கார்த்திக்கின் ஈர்க்கும் குரல் மட்டுமே இந்தப் பாடலின் பலமாக நான் நினைக்கிறேன். சொல்வதற்கென்று வேறு எதுவும் இல்லை இந்தப் பாடலைப் பற்றி.
  
    நாக்கு மொக்க -- செம mass பாடல் தான். தாரை தப்பட்டை பிஞ்சும் அளவு அடிபட்டிருக்கும் பாடல்.ஆனாலும் எனக்கு இந்த பாடலில் சில விஷயங்கள் பிடித்திருந்தது. முதலில் குரல். சின்னப்பொண்ணு என்று யாரோ பாடி இருக்கிறார். கேட்கப்படாத வரிகள் இந்தப் பாடலைத் திரும்பக் கேட்க வைத்தது. Radioவில் ஒலித்த முதல் நாளே எல்லோரையும் பேச வைத்த பாடல். கேட்கக் கேட்க வெறுப்பு தான் வந்தது.ஆனால் அந்த முதல் impression தந்த பிரமிப்பு இன்னும் போகவில்லை.  

  சூ சூ மாரி -- இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவே எழுதி இருப்பதால் இங்கு அவ்வளவாக வேண்டாம். சேட்டை நிறைந்த நல்ல பாடல்.   

 
  

 

1 comment:

SuryaRaj said...

radhika!thanks for letting me know abt the previous post.i hope it's fine now.